jkpo;nkhopapd; rpwg;Gk;
jkpo; fw;wypd; ngUikAk
Nguhrpupau; ghyRe;juk; ,isajk;gp
jkpo;j;Jiwj; jiytu;.
உலக மொழிகளில் மிகவும் தொன்மையும், தொடர்ச்சியும் வாழ்வும் வளமும் கொண்ட மொழி தமிழ்மொழியாகும். தமிழ்மொழி, செம்மொழித் தகுதியும், தொன்மை மிகு பண்பாட்டுச் சிறப்பும் கொண்டுள்ளதால் கனடா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து முதலிய நாடுகள் ‘தமிழ் மரபுரிமைத் திங்கள்’ கொண்டாடுவதற்குரிய அரச அங்கீகாரமும் தமிழ்மொழிக்குக் கிடைத்துள்ளமை சிறப்பாகக் குறிப்பிடப்பட வேண்டியதாகும். ஆயிரக் கணக்கான தலைமுறையினராலே தொடர்ச்சியாகப் பேசப்பட்டு வந்த தமிழ்மொழியின் தோற்றக்களம், தொன்மை, இலக்கிய, இலக்கண வளம், தமிழ்மொழி கூறும் பண்பாட்டுச் சிறப்பு, உலக மக்களுக்குத் தமிழ்மொழியும் தமிழ்ப் பண்பாடும் அளித்த பங்களிப்புக்கள் என்பன பற்றியெல்லாம் பல நூற்றுக் கணக்கான ஆய்வுகளும் வெளிவந்தவண்ணமுள்ளன. உலகிற் பேச்சுவழக்கும் எழுத்துவழக்கும் கொண்டனவாக 700 மொழிகளே உள்ளன. அம்மொழிகளில் மிகவும் தொன்மையான மொழிகள் தமிழும் சீனமும் என்பதைத் தமிழர் கருத்திற் கொள்ள வேண்டும்.
உலக நாடுகளில் சுமார் பத்துக்கோடி தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். தமிழ்மொழி 6000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டது என ஆய்வாளர் குறிப்பிடுவர். எழுத்தியல் ஆய்வாளர்கள் கி.மு. 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்துவெளி நாகரிக மக்கள் வழங்கிய மொழிக்கும், தமிழ்மொழிக்கும் உள்ள ஒற்றுமைகள் பற்றி ஆராய்ந்துள்ளனர். றொபேர்ட் கால்டுவெல் (1856), வரலாற்றுப் பேராசிரியர் எச். ஹிராஸ் பாதிரியார், ஜி. யு. போப், அஸ்கோ பர்போலா முதலிய மேனாட்டு அறிஞர்கள் தமிழ்மொழியின் தொன்மையைச் சான்றுகளுடன் நிறுவியுள்ளனர்.
உலகில் வாழும் மொழிகளில் மூத்தமொழியாகத் தமிழ்மொழி விளங்குவதோடு, பூர்வீகத் திராவிட மொழிகளின் மூத்தமொழி தமிழ்மொழியே என்பதும் றொபேர்ட் கால்டுவெல் தொடக்கம் இன்றைய மொழியியலாளர் வரையிலான அறிஞர்களின் ஆய்வுக் கருத்தாகும்.
வடஆபிரிக்காவில் கம்றூன் பிரதேசத்தில் வாழும் இனக்குழுவினரின் பேச்சுமொழியில் தமிழ் உச்சரிப்புடன் சொற்கள் வழங்குதல் அறியப்பட்டுள்ளது. தமிழ்மொழிக்கும் பண்டைய சுமேரிய மொழிக்குமிடையே மிகுந்த ஒற்றுமைகள் காணப்படுதலும், 50% வீதத்திற்கும் மேல் சுமேரியமொழிச் சொற்கள் தமிழ்ச் சொற்களுடன் ஒத்த ஒலிப்புடன் அமைந்துள்ளமையும் அறியப்பட்டுள்ளன. மேலும், அக்கேடியம், பாபிலோனியம், எகிப்தியம், முதலான பழைய நாகரிகங்களை ஆராய்ந்தோர் அவர்களின் பண்பாடுகளுடன் குமரிக்கண்ட மக்களின் புலப்பெயர்ச்சியால் ஏற்பட்ட தொடர்புகளின் நல்ல விளைவுகளைக் குறிப்பிடும் செய்திகளும் தமிழ்மொழியின் தொன்மையையும், அதன் பரவல் நிலையையும் சான்றுபடுத்துகின்றன.
தமிழகத்தில் கிடைக்கப்பெறும் தொல்லியல் சான்றுகளின் ஆய்வு முடிபுகளும், கடலில் மூழ்கிய பூம்புகார்ப் பட்டின ஆழ்கடல் ஆய்வுகளும் தமிழகத்துப் பண்பாட்டுக் காலத்தைச் சிந்துவெளி நாகரிக காலத்துடன் ஒப்பிட்டு, தமிழரின் இருப்பைக் கி. மு. 10,000 ஆண்டுகளுக்கு மேலாகக் குறியிட்டுக் காட்டுகின்றன. தமிழ் மொழியை முச்சங்கங்கள் வளர்த்த வரலாறும், அச்சங்கங்கள் ஒன்றன் பின் ஒன்றாக 11,070 ஆண்டுகள் நிலைபெற்றிருந்தன என்ற தகவல்களும், சங்கப் புலவர்களால்; அகத்தியம், முதுநாரை, முதுகுரகு, பஞ்சபாரதீயம், தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு முதலான நூல்கள் எழுதப்பட்டமை பற்றிய இலக்கிய வரலாற்றுச் செய்திகளும் தமிழின் தொன்மை வரலாற்றுச் சிறப்புக்களாகும். குமரிக்கண்ட வரலாறும், தென்குமரி நாட்டிலே முதலிரு சங்கப் புலவர்களால் தமிழ்மொழி சிறப்புற்று விளங்கியமையும் பல்வேறு சான்றுகளால் அறியப்படுகின்றன. குமரிக்கண்டம் காலத்திற்குக் காலம் ஆழிப்பேரலைகளால் அழிக்கப்பட்டமையைப் பூகம்பவியலாளர் நிரூபித்துள்ளனர்.
தொல்காப்பியமே பண்டைத் தமிழ்மொழியின் இலக்கண நூலாகக் கிடைத்துள்ளது. தொல்காப்பியம் தோன்றுவதற்கு முன்பாகவே தமிழில் செவ்வியல் இலக்கிய இலக்கண மரபுகொண்ட தனிமொழியாகத் தமிழ் வழங்கியுள்ளது என்பதற்குத் தொல்காப்பியர் தனக்கு முந்தித் தோன்றிய இலக்கண நூல்களின் விதிமுறைகளை 166 இடங்களிற் குறிப்பிட்டுள்ளமை சான்றாகும். தொல்காப்பியம் கி.மு. 700க்கு முன்னர் தோன்றியதெனத் தமிழறிஞர் நிறுவியுள்ளனர். தொல்காப்பியர் தன் காலத்திலும். தனக்கு முற்பட்ட காலத்திலும் வழங்கிய பேச்சுமொழி, இலக்கிய வழக்காறு என்பவற்றின் இயல்புகளையும் மக்களின் அகம், புறம் சார்ந்த வாழ்வியல் பொருண்மைகளையும், தமிழ் மொழியின் எழுத்து, சொல், பொருள் என்ற அடிப்படையிலான இலக்கணம் என்பனவற்றையும் விளக்கி ஆவணப்படுத்தியுள்ளமை தமிழ்மொழிக்குக் கிடைத்த அரும் பெரும் கொடையாகும்.
வடமொழியின் ஆளுமைக்குட்பட்ட மலையாளம், தெலுங்கு, கன்னடம் முதலான மொழிகளைப்போல் தன் தனித்தன்மையை இழக்காது, தமிழ் தமிழாகவே நிலைபெறுவதாயிற்று. ஆயினும் தமிழினம் வேதாகமம் வழிப்பட்ட சமயத்தினூடாக பெருந்தொகையான வடசொற்களை உள்வாங்கிக் கொண்டது. தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் ஆரியச் சார்பாளர் தமிழ்ப் பண்பாட்டுக்கு மாறான பல நூற்பாக்களை இடைச்செருகல் செய்துள்ளனர். திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் பற்றி ஆராய்ந்த றொபேர்ட் கால்டுவெல் (1856) தமிழ்மொழியிலிருந்து வடமொழி பெருந்தொகையான சொற்களைக் கடன் வாங்கியுள்ளமையைச் சான்றுகளுடன் நிறுவியுள்ளார். தமிழகத்தில் நடனக்கலை, இசைக்கலை என்பன மக்கள் வாழ்வியலிற் பெரிதும் முதன்மை பெற்றிருந்தன. முத்தமிழ்க் கலைஞர்கள் மன்னராலும் மக்களாலும் மதிப்பளிக்கப்பட்டனர். சிலப்பதிகாரம் பண்டைத் தமிழரின் இசைக்கலை, நடனக்கலை என்பன பெற்றிருந்த உயர்வளர்ச்சி நிலையைப் பதிவுசெய்துள்ளது.
சங்ககாலத் தமிழர் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என உலகு தழுவிய பரந்த உள்ளத்தோடு வாழ்ந்தனர் என்ற எண்ணக் கருவை உலகுக்குக் கூறிய சங்கப்; புலவர் கணியன் பூங்குன்றனாரின் கருத்தைப் பிறமொழியாளருக்கும் எடுத்துரைக்க வேண்டும். சங்ககாலம் முதலாகத் தமிழ் மொழியிலலே தோன்றிய புறநானூறு, அகநானூறு முதலான பதினெண்மேற்கணக்கு நூல்கள், திருக்குறள், நாலடியர் முதலிய பதினெண் கீழக்கணக்கு நூல்கள், அவற்றைத் தொடர்ந்து தோற்றம் பெற்ற சிலப்பதிகாரம், மணிமேகலை முதலான ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், கம்பராமாயணம், பெரியபுராணம், சீறாப்புராணம், தேம்பாவணி முதலான பேரிலக்கியங்கள், சைவ, வைணவ, சமணப் பக்தி இலக்கியங்கள், 96 வகைப்பட்ட சிற்றிலக்கியங்கள், தனிப்பாடல்கள், சித்தர் பாடல்கள் என்பனவற்றுடன், அவற்றைத் தொடர்ந்து இலக்கிய வளம் சேர்த்த 19ஆம் 20ஆம் நூற்றாண்டு இலக்கியச் செல்வங்களும் பெற்று, உலகிலே இலக்கிய வளம் செறிந்த மொழி தமிழ்மொழியே என்பதை ஒவ்வொரு தமிழரும் கருத்திற் கொள்ளவேண்டும்.
தமிழ் மொழியின் உலகளாவிய சிறப்புக்குத் திருக்குறளின் பெருமை உலகெலாம் பேசப்படுவதும், 45க்கும் மேற்பட்ட உலகமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளமையும் தக்க சான்றுகளாகும். யுனெஸ்கோ (UNESCO) திருக்குறளுக்கு உலக இலக்கியம் என்ற ஒப்பளிப்பு வழங்க இருப்பதும் தமிழ்மொழிக்குப் பெருமை தருவதாகும்.
இத்தகு பெருமைமிக்க தமிழ்மொழியைப் பல்கலைக்கழகப் பட்டப் படிப்பாக மேற்கொள்வதற்குரிய வாய்ப்பு எல்லோருக்கும் குறிப்பாகப் புலம்பெயர்ந்து வாழும் தமிழருக்குக் கிடைப்பதில்லை. அத்தகையதொரு தமிழ்க் கல்வியை வழங்கும் நோக்கோடு 2005ஆம் ஆண்டு முதலாக தமிழ்நாடு அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தொலைதூரக் கல்வித்திட்டத்தில் இணைந்து, கனடாவில் “தென்னாசிய நுண்கலை கற்கை மையம்” தொடங்கப்பட்டு, இளங்கலைமானி, முதுகலைமானி, முனைவர் முதலான பட்டப் படிப்புக்குரிய கற்கைநெறிகளை தகுதியும் பட்டறிவும் மிக்க விரிவுரையாளர்கள் மாணவர்களுக்கு வகுப்பறைக் கல்வியாகவும் இணையவழியாகவும் கற்பித்து வருகிறார்கள். அண்ணாமலைப் பல்கலைக்கழகம் துறைசார்ந்த பேராசிரியர்களைக் கனடாவுக்கு அனுப்பி, எமது மாணவர்களுக்குரிய தேர்வுகளை நடத்திப் பட்டங்களையும் வழங்குகிறது என்பதை மாணவருக்குச் சிறப்பாகக் குறிப்பிட விரும்புகிறோம். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர் தமிழ் கற்றுப் பட்டங்கள் பெற்றுளார்கள். எமது கல்வி மையத்திலே கனடா, அமெரிக்கா, பிரான்சு, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து மாணவர் இணையவழியாகக் (SKYPE) கற்று வருகிறார்கள். இப்பாடநெறிகளுடன் மொழியியல் பாடமும் கடந்த இரு ஆண்டுகளாகக் கற்பிக்கப்படுகிறது என்பதையும் சிறப்பாகக் குறிப்பிட விரும்கிறேன்.
எமது தென்னாசிய நுண்கலை கற்கை மையத்தில் தமிழ்க் கல்வியுடன் நுண்கலைகள், யோகா முதலிய கற்கை நெறிகளில் டிப்ளோமா, மற்றும் பட்டப் படிப்புகளுக்குரிய பாடநெறிகளும் வகுப்பறைக் கல்வியாகவும் இணையவழியாகவும் கற்பிக்கப்படுகின்றன என்பதையும் பல்துறை மாணவர்களுக்கு அறியத் தருகின்றேன்.
தமிழ் கற்று உயர்வோம் - தமிழால் இணைவோம்.
Robert Caldwell
Henry Heras
George Uglow Pope
Asko Parpola